திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உறுதியளித்த முதல்வர் விஜய்
cm vijay about thiruparankundram deepam issue at alliance party mlas meet: தவெக ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ஆகியவை குறித்து முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
தவெக ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
தவெக ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முதலமைச்சரின் அரசு இல்லமான பாமணி இல்லத்தில் நடைபெற்றது.

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கும், மன்னார்குடி தொகுதியின் அமமுக எம்.எல்.ஏ. காமராஜும் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
இந்த கூட்டத்தில், சாலை பாதிப்பு, குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட தொகுதி சார்ந்த பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுவை முதல்வரிடம் எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ளனர்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தவறான வகையில் குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டு குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்ததாக சிபிஎம் எம்எல்ஏ லதா கூறியுள்ளார்.
இதே போல், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சிபிஐ எம்.எல்.ஏ மாரிமுத்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதச்சார்பின்மை கொள்கையை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு "உங்க நிலைப்பாடுதான் எங்க நிலைப்பாடும், மதச்சார்பின்மை வழியில் தான் இந்த அரசு நடக்கும்" என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார்.