ராகுல் காந்தி, டி.ராஜாவை சந்தித்த முதல்வர் விஜய்
டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
ராகுல் காந்தியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த மே 27 ஆம் தேதி முதல்முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
இந்நிலையில், இன்று 2வது முறையாக முதலமைச்சர் விஜய் 3 நாள் பயணமாக தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.

அங்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர், குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நடராஜர் படம் பரிசளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவை சந்தித்து பேசியுள்ளார்.

நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டிற்குத் தேவையான முக்கியத் திட்டங்கள் மற்றும் துறை ரீதியான கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.