நிதியமைச்சரிடம் முதல்வர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டைச் சார்ந்த நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள் மற்றும் தொழில் வழித்தடங்களுக்கு முன்னுரிமை வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று (27.05.2026) புதுதில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு நாட்டின் விரைவாக வளர்ச்சி பெற்றுவரும் மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதாகவும், இந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் அதிக முதலீடு அவசியம் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சித் தேவைகளை கருத்தில் கொண்டு, துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள் மற்றும் தொழில் வழித்தடங்களுக்கு முன்னுரிமை வழங்கி போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் மேம்படுத்தும் வகையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்றும், மாநிலத்தின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களின் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.