சென்னை விமான நிலையம் - தனியார் மயமாக்க முதல்வர் விஜய் கடிதம்

Vijay Narendra Modi Chennai Airport & Aviation Services
By Karthikraja Sep 19, 2026 05:19 AM GMT
Report

cm vijay letters modi to privatise chennai airport: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனியார் மயமாகும் சென்னை விமான நிலையம்?

சமீபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவித்தார். இதனால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது. 

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்குமாறு முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை விமான நிலையம் - தனியார் மயமாக்க முதல்வர் விஜய் கடிதம் | Cm Vijay Letters Modi To Privatise Chennai Airport

இந்த கடிதத்தில், “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும் முக்கியமானவை. 

பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும். 

தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர் நிர்வாகமான Airports Authority of India – AAIஐ மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிஎம் எதிர்ப்பு

தவெக அரசின் இந்த முடிவுக்கு அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு தரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மூத்த தலைவர் கனகராஜ், "சென்னை விமான நிலையத்தின் சேவையில் குறைபாடு இருக்கிறது என்பதற்காக அதைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எப்படி சரியான தீர்வாக இருக்க முடியும்?

நாளை அரசாங்கத்தால் ஒரு பணியைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்றால், அரசாங்கத்தையே தனியார் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வீர்களா?

தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு பொதுத்துறை நிறுவனத்தை, “தனியார் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு மாநில அரசே கேட்பது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது.

சென்னை விமான நிலையம் தொடர்பான செய்தியைப் பார்த்ததும், “இது தமிழ்நாடுதானா? தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான் இப்படியொரு கடிதத்தை எழுதியிருக்கிறாரா?” என்ற கேள்வி எழுகிறது.

விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால், அதன் சேவையை எப்படி மேம்படுத்துவது என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைப்பது தீர்வாக இருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.