முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியபோது அதனை கேட்டு முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடரின் 5வது நாளான இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "நீங்கள் எல்லாம் பேப்பரை படிக்கவில்லையா? என்று அன்றைக்கு முதல்வர் சொன்னது எங்களுக்கு வருத்தம்.

நாங்கள் திராவிட இயக்கம், பேசி பேசி ஆட்சியை பிடித்த இயக்கம். கலைஞர் காலத்திலும் சரி, மு.க.ஸ்டாலின் காலத்திலும் சரி அமைச்சர்களுக்கெல்லாம் ஒரு பதபதப்பு இருக்கும். ஏனென்றால் காலையிலேயே பேப்பரை படித்து எங்களுடைய தலைவர்கள் அந்த துறையினுடைய அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கு நேரடியாக பேசுவார்கள்.
அந்த துறை அமைச்சர்களை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை சரி செய்ய சொல்வார்கள். எனவே ஒரு டென்ஷனிலேயே 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தோம். ஆனால் நீங்கள் ரொம்ப ரிலாக்ஷாக இருக்கிறீர்கள், அது தான் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், "எங்களுடைய முதல்வர் சின்ன வாய்க்கால் பிரச்சனைக்கு கூட போன் அடித்து அதை உடனே சரி செய்துவீட்டீர்களா என்று கேட்கிறார். நீங்களாவது 5 வருடம் தான் டென்ஷனாக இருக்கிறீர்கள், நாங்கள் தினந்தோறும் டென்ஷனில் இருக்கிறோம்” என்று கூறினார்.
இதன் பின்னர் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எங்கள் ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதில்லை என பேசினார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "கடந்த ஆட்சியில் நெல் சேமிப்பு கிடங்கு ஏன் அமைக்கவில்லையென்று தொடர்ந்து விவசாயிகள் கேட்டு போராடிக்கொண்டிருந்தார்கள்.

குறிப்பாக, விவசாயிகளை பட்டியலைப் போட்டவர். ஒரு முக்கியமான விவசாயியை மறந்துவிட்டார். கரும்புத் தோட்டத்தில் கான்கீரிட் போட்டு நடந்த விவசாயி பற்றி அவர் சொல்ல மறந்துவிட்டார் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "இப்பதான் தெரியுது. நீங்க எப்படியெல்லாம் பிரச்சாரம் பண்ணிருக்கீங்கன்னு, மாண்புமிகு சாமி அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்" என்று கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எனக்கூறுவதற்கு பதிலாக சாமி அமைச்சர் எனகுறிப்பிட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது. முதல்வர் விஜய்யும் அதனை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.