டெல்லியில் அரசியல் சந்திப்புகள்; நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கும் முதல்லர் விஜய்
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் கடந்த மே 27-ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துவிட்டு மறுநாளே சென்னை திரும்பியிருந்தார்.
இந்நிலையில், நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் விஜயை, தமிழ்நாடு இல்லத்தில் தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
பின்னர் மாலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு வழிநடத்த முதலமைச்சர் விஜய்க்கு அவர் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவையும் சந்தித்துப் பேசினார். இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மாநிலத்தின் முக்கிய கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளையும் டெல்லியில் தங்கியிருக்கும் முதலமைச்சர் விஜய், மேலும் சில முக்கிய தலைவர்களைச் சந்தித்துவிட்டு மாலை சென்னை திரும்புவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.