இசையமைப்பாளர் தேவாவின் இறுதிப்பயணத்திற்கு அரசு மரியாதை!
தமிழ்த் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராகப் பணியாற்றிய ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இறுதிப்பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவரது உடல் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அரசு மரியாதை
சென்னையின் மயிலாப்பூரைச் சேர்ந்த தேவநேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தேவா, 1986ஆம் ஆண்டு மாட்டுக்கார மன்னாரு திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக, கானா பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தார்.
75 வயதான தேவாவுக்கு சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.தமிழக முதலமைச்சர் விஜய்யும் நேரில் அஞ்சலி செலுத்தி, தேவாவின் மகன் ஸ்ரீகாந்துக்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.