மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரும் - முதலமைச்சர் விஜய் அறிக்கை
2026 மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

மேலும் மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.5,000 தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தலா ரூ.1000 பணமும், ரூ.2000 கோடைக்கால சிறப்புத் தொகையும் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.