ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கலாம் - முதல்வரின் முடிவு என்ன?
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் எனப் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
அதன் தொடர்ச்சியாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆக்சிஜனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
அதனால் நான்கு மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கலாம். அங்கு ஆக்சிஜன் மட்டும் தான் தயாரிக்கப்படுகின்றதா என உள்ளூர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை வைத்து கண்கானிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இன்று தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.