'' தைரியமா இரு... அப்புறம் வந்து பாக்குறேன் '' : முகச்சிதைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுமியை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Aug 30, 2022 03:34 AM GMT
Report

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

சென்னை அடுத்த ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதி சேர்ந்த ஸ்டீபன் ராஜ் சௌபாக்கியா இவர்களின் மூத்த மகள் டானியா. இவருக்கு அரியவகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இவரின் ஒரு பக்க முகம், முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் தொடங்கியது.

இதுகுறித்து தகவல்செய்தியாக வெளியான நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறுமி தானியாவுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி தானியா அனுமதிக்கப்பட்டார்.

தைரியமா இரு

அங்கு 10 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிறுமிக்கு 10 மணி நேரம் முக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து சிறுமி தானியா குழந்தைகள் வார்டுக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டானியாவை முதல்வர் முக.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது சிறுமியிடம் முதலமைச்சர் தைரியமா இரு... அப்புறம் வந்து பாக்குறேன்..." என ஆறுதல் கூறினார். அப்போது சிறுமியின் தாயார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார், இவ்ளோ சீக்கிரம் சரி ஆவான்னு நான் நெனச்சே பாக்கல ஐயா , இங்க உள்ள மருத்துவர்கள் நன்றாக கவனிக்கின்றார்கள் ரொம்ப நன்றி என்று கூறினார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், 6 ஆவது நாளான இன்று சிறுமி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

புன்னகை மட்டும் போதுமே

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் : சிறுமி டானியாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்.வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால், இது சாத்தியமாகியுள்ளது.

இந்தப் புன்னகையைவிட எது இன்றைய நாளை முழுமையாக்கியிருக்க முடியும்?நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம் என பதிவிட்டுள்ளார்.