கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது அவரின் 4வது நினைவு தினம் ஆகும்.
கலைஞர் நினைவு தினம்
காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி 2018 ஆகஸ்ட் 7ம் தேதி அன்று காலமானார். இன்று அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் கருணாநிதி இல்லம் மலர்களால் இதய வடிவில் அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க இருக்கும் கருணாநிதியின் சிலைகள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஊர்களில் இருக்கும் திமுக கட்சி கொடிகள் முன் கருணாநிதி புகைப்படம் வைக்கப்பட்டு மலர் தூவப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
சிலை திறப்பு
கருணாநிதியின் 4 வது நினைவுதினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வகையில் சென்னை பெசண்ட் நகரில் ஆல்காட் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் கருணாநிதியின் பேனாவை மெரினா வங்கக்கடலில் சிலையாக அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மெரினாவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்திற்கு மிக அருகில் இந்த நினைவுச்சின்னம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது