மீண்டும் மஞ்சப்பை இயக்கம் - நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2019 ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்போது தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் அழிக்கப்பட்டன. தடையை மீறி பயன்படுத்துபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இருப்பினும் இதை செயல்படுத்துவதில் மக்கள் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது.
மேலும் கொரோனா பரவல் காரணமாக இந்த தடையை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. அதனால் பிளாஸ்டிக் ஒழிப்பில் தமிழக அரசால் வெற்றிகாண முடியவில்லை.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் விதமாக ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற பெயரில் பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையின் நோக்கம்.
இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில, மாவட்ட அளவிலான பணிக்குழுக்களையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்க உள்ளது.
தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்டுகிறது. இதனை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பைகள் உட்பட) மாற்றுப் பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்படக் கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை-5, வாலாஜா சாலையில் அமைந்துள்ள “கலைவாணர் அரங்கத்தில்” வைக்கப்பட உள்ளது.
இந்த பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை 23-ந்தேதி அன்று மாலை 7 மணி வரை செயல்படும் எனவும், பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.