தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்- ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி!
விஷக் கருத்துகளைத் தமிழ் மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள் என ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
இது குறித்து முதலமைச்சர் முக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது "தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்" என்றும்; “திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும் கூறியதை மறக்க முடியுமா?
'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது? தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா?
தமிழ்மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது? பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என ‘எங்கும் இந்தி – எதிலும் இந்தி’ என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான்.
ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் - திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்?
பதிலடி
சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்? உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது,
திராவிடநல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால்,
அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள். நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.