எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின்
திமுக நிர்வாகிகள் வீடு வீடாக பொதுமக்களை சந்திக்கவுள்ளனர் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஓரணியில் தமிழ்நாடு' என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள் செல்வார்கள். அங்கு திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்பார்கள். திமுகவின் அமைப்பு ரீதியில் 76 மாவட்டங்களிலும் நாளை முதல் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
நாளை மறுநாள் முதல் அனைத்து வீடுகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யப்படும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பாரபட்சம் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் கூட போய் பிரச்சாரம் செய்வோம். பிரதமரும், அமித் ஷாவும் அடிக்கடி வந்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
ஓரணியில் தமிழ்நாடு
அவர்கள் ஒவ்வொரு முறையும் வரும்போதெல்லாம் பொய் கூறுகிறார்கள். இது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இதனால் திமுகவுக்கு நன்மைதான். ஆளுநரைக் கூட மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால், நாங்கள் அதுபோல் கேட்கவில்லை.
அவர் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டு திமுகவுக்குத்தான் நன்மை செய்கிறார். திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பிருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்ததும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லாத காலை உணவு திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.
கட்சி எல்லைகளைத் தாண்டி தமிழகப் பிரச்சினைகளுக்காக நாம் ஓரணியில் நிற்க வேண்டும். பாஜகவின் போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க சக்தி தமிழகத்திற்குத் தேவை. 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற இயக்கத்தில் சேர 9489094890 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
திருப்புவனம் இளைஞர் லாக் அப் மரண வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மரண வழக்கில் தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.