நான் பணம் கொண்டுவரவில்லை ... அபுதாபி தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மு.க.ஸ்டாலின்
துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அபுதாபி தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழ் மக்களிடையே உரையாற்றினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அதேசமயம் அங்கு நடக்கும் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கைத் திறந்து வைத்தார்.
மேலும் துபாயில் உள்ள Museum of the Futureஐ என்ற அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் தனது துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் அபுதாபிக்குச் சென்றார். அங்கும் பல தொழிலதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து அபுதாபி தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "நான் துபாய்க்குப் பணத்தை எடுத்து வந்துள்ளதாகச் சிலர் அவதூறு பரப்புகின்றனர். நான் பணத்தைக் கொண்டு வரவில்லை, தமிழ்நாட்டு மக்களின் மனங்களைத்தான் கொண்டு வந்துள்ளேன் என தெரிவித்தார்.
இந்த பயணத்தின் வெற்றியைச் சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கும் பயணமான எனது துபாய் பயணம் அமைந்துள்ளது. ஆனால் இந்த வெளிநாட்டுப் பயணத்தைத் திசைதிருப்ப வேண்டும் எனச் சிலர் தவறான பிரசாரத்தைப் பரப்பி வருகின்றனர். 4 நாட்களிலேயே துபாய் பயணத்தை முடித்துவிட்டோமே, இன்னும் 4 நாட்கள் இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் உள்ளது.
நான் கடந்த கால பெருமிதம். மறுபுறம் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே செயல்பட்டு வருகிறேன் என மு.க.ஸ்டாலின் பேசினார். பேச்சைக் குறைத்து செயலில் நம் திறமையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறேன். DO or Die என்பார்கள். ஆனால், Do and Die எனப்படும் செய்து முடித்துவிட்டுச் செத்துமடி என்பதே புதுமொழி என பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.