ISRO: தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தமிழக அரசின் சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாராட்டு விழா
தமிழ அரசு சார்பில் 'விண்வெளி துறையில்' சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. உயர் கல்வித்துறையின் சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்' என்ற தலைப்பில் விழா நடைபெற்றது.
இதில் இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, நிகர் ஷாஜி மற்றும் சந்திரயான் -3 திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது "தமிழனாக பிறந்த பெருமையை அதிகமாக அடைந்து கொண்டிருக்கிறேன். இந்தியாவின் பக்கம் உலகையே பார்க்க வைத்த தமிழக அறிவியல் மேதைகள் 9 பேர் இங்கே இருக்கின்றனர்.
மு.க. ஸ்டாலின் பேச்சு
உங்கள் 9 பேரையும் ஒரே இடத்தில் வைத்து பாராட்ட முடிவு செய்தோம். ஆகஸ்ட் 23ல் சந்திரயான்-3ஐ நிலவில் தரையிறக்கி இஸ்ரோ சாதனை புரிந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கொடிகட்டி பறக்கும் தமிழர்கள் என்ற செய்தி அதிகமாக பரவியது.
இத்தகைய பெருமையை தேடித்தந்த இந்த 9 விஞ்ஞானிகளையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். இதில் 6 பேர் அரசுப்பள்ளியில் பயின்றவர்கள். தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தமிழக அரசின் சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
தமிழக விஞ்ஞானிகளின் உழைப்பின் அங்கீகாரமாக இது வழங்கப்படுகிறது. விஞ்ஞானிகள் மேலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும். 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் 9 மாணவர்களுக்கு 'சாதனை விஞ்ஞானி' என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படும்" என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.