தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி

modi stalin oxygen scarcity
By Praveen May 08, 2021 05:09 PM GMT
Report

தமிழகத்துக்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு தேவை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வைத்த கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேற்று, தேசிய ஆக்சிஜன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு உடனடியாக கூடுதல் ஆக்சிஜனை வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில், தமிழகத்துக்கு உடனடியாக 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 20 க்ரையோஜெனிக் கண்டெய்னர்களையும் அவற்றை கொண்டுவர ரயில் போக்குவரத்து வசதியையும் மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அதேபோல், இன்று கரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் தமிழக முதல்வர்களுடம் பிதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போதும், தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாகஉயர்த்தி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

அதனை உடனடியாகப் பரிசீலிப்பதாக பிரதமர் மோடியும் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மக்கள்நல் வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்துக்கு 419 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்படும் என்றும். அது எந்தெந்த வகையில் வழங்கப்படும் என்பதும் விவரமாக விளக்கி உரைக்கப்பட்டிருக்கிறது.