ஜெய்பீம் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு - ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ள 'ஜெய்பீம்' திரைப்படத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெய்பீம் படக் குழுவினருக்கு வணக்கம்! நேற்றையதினம் 'ஜெய்பீம்' படத்தைப் பார்த்தேன். அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக ஆக்கிவிட்டன.
விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக, கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயலாது என்பதைக் காட்டிவிட்டீர்கள்.
நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் கனமானதாக இருக்கிறது.
சில நேரங்களில் சில காவல் துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள், அந்தத் துறைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதேநேரத்தில், உண்மையை வெளிக்கொண்டு வர இன்னொரு காவல் துறை அதிகாரியே துணையாக இருக்கிறார் என்பதையும் காட்டி இருக்கிறீர்கள்.
நேர்மையும்,மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதையும் காட்டி உள்ளீர்கள் என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான 'ஜெய்பீம்' படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள் ! நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.