'' தமிழ்நாடு வாழ்க என கோலமிட்டு தை முதல் நாளை வரவேற்போம்" - முதலமைச்சர் ஸ்டாலின்
ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலும் தமிழ்நாடு வாழ்க என கோலமிட்டு தை முதல் நாளை வரவேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் :
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழர்களின் 150 ஆண்டுகால கனவான - தென் தமிழ்நாட்டின் தொழில்வளத்தையும் வேலைவாய்ப்பையும் பெருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திடும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வீட்டிலும் நாட்டிலும் வளர்ச்சியும், அதனால் எழுச்சியும் மகிழ்ச்சியும் பொங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நமது அரசு செயல்பட்டு வருகிறது.
சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் கொண்ட சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம். மக்களின் நலன் காப்போம். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மீட்போம். ஜனநாயகப் பாதையில் பயணிப்போம்.
ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்! தமிழ்நாட்டு மக்களுக்கும், கழகத்தோழர்களான அன்பு உடன்பிறப்புகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கனிந்த பொங்கல் - தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.