தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்கு குடியரசு தலைவர் வருகை - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சரான பிறகு முதன் முறையாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று நேரில் சந்தித்தார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கடந்த ஜூன் 17-ம் தேதி டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார். மறுநாள் 18-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரையும் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை 5 மணி அளவில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற முதல்வர் தற்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சந்திப்பில், சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான
விழாவுக்குத் தலைமைதாங்கி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்தாகவும் கூறியுள்ளார்.