குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு ஏமாற்றமளிக்கிறது : பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

letter dmk republicday cmstalin
By Irumporai Jan 17, 2022 12:46 PM GMT
Report

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசு தின விழாவையொட்டி ஜனவரி 26 அன்று புதுடெல்லியில் மாநிலங்களில் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறும். இதில் பங்கேற்க தமிழக அரசு அனுப்பியிருந்த புகைப்பட மாடல் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்ததன் காரணமாக தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டு இருந்தது.

பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ. உ.சி, வேலுநாச்சியார் , பாரதியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்பட்டது.  

இதேபோல் மேற்குவங்கம், கேளரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு திமுக எம்,பி., கனிமொழி, மதிரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு சார்பில் அலங்கார வாகன ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று வந்த நிலையில், இந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

அதில், “ குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

மாண்புமிகு பிரதமர் அவர்கள் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.