கள்ளக்கூட்டணி என்ன ‘கெட்டப்’ போட்டு வந்தாலும்..வெற்றி நமதே - முதலமைச்சர் முக ஸ்டாலின்!
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறுவதைத் தடுக்க முடியாது என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிதிப் பங்களிப்பு
இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அரசின் நிறுவனங்களும், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் வெளியிடும் புள்ளி விவரங்களில் தமிழகம் பல்வேறு இலக்குகளில் சிறந்து விளங்குகிறது. அப்படியிருந்தும் நமக்குரிய நிதிப் பங்களிப்பு கிடைக்கவில்லை.
இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழகம் என்ற இலக்கை அடைய 7-வது முறையும் திமுக ஆட்சி தொடரவேண்டும். அந்த வாய்ப்பை வழங்க மக்கள் தயாராக உள்ளனர். அதேநேரம், அதைக் கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும்.
தமிழக மக்களுக்கு எதிரான தமிழகத்துக்கு எந்த பயனுமி்ல்லாத, கள்ளக்கூட்டணி வைத்துள்ள, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து வெற்றியை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இருநூறு தொகுதிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வெற்றிப்பாதையில் பயணிக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
திமுக கூட்டணி வெற்றி
இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு. அண்ணா அறிவாலயம் நம் எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. அறிவாலயத்தில் இருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காணலாமே தவிர, ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது. ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறுவதைத் தடுக்க முடியாது.
அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும். எனவேதான், கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே. கவனமாக உழைப்போம். வெற்றி நமதே. இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.