குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அன்புக்கரங்கள் திட்டம்
குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.
அதே போல், பெற்றோர்கள் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், அன்புக்கரங்கள் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டப் படி, அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்ப்படும்.
மேலும், பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்படும்.
இன்று சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார்.
மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12 ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்.
இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
நீங்கள் கவலைப்பட வேண்டாம்
திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "உங்களுக்காக நான் இருக்கிறேன்; உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
ஏழை குழந்தைகளின் சிரிப்பை நிலைப்படுத்தும் அன்புக் கரங்கள் திட்டம் தான், அண்ணாவுக்கு நாங்கள் செலுத்தும் மரியாதை. அரசியல் என்பது மக்கள் பணி, கடுமையான பணி.
காலையில் ஓரிடத்திலும் மாலையில் பல நூறு கி.மீ. தூரத்திலும் மக்களை சந்திப்பேன். எங்களை பொறுத்தவரை சொகுசுக்கு இடம் இல்லை.
பெரியார், அண்ணா, கலைஞர் எங்களுக்கு உழைப்பைத்தான் கற்று தந்தனர். எங்களின் அடிப்படை பதவி அல்ல, பொறுப்புதான். எந்தத் திட்டத்தையும் வாக்கு அரசியலுக்காக கொண்டுவரவில்லை" என பேசினார்.