அரசியலுக்கு அப்பாற்பட்டு மு.க.ஸ்டாலின் என் நண்பர் தான்...மேடையை அதிர வைத்த கமல்
தாத்தா கருணாநிதி தொடங்கி பேரன் உதயநிதி வரை எங்கள் நட்பு தொடர்கிறது என விக்ரம் பட ஆடியோ விழாவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், என் தமிழ் உச்சரிப்புக்கு மூவர் காரணம் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன் தான். இந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால் தமிழுக்கு ஆபத்து வந்தால் விடமாட்டேன் என தெரிவித்தார்.
மேலும் தாத்தா கருணாநிதி தொடங்கி பேரன் உதயநிதி வரை எங்கள் நட்பு தொடர்கிறது என தெரிவித்த அவர், அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டார். அரசியலில் ஸ்டாலின் அந்தப்பக்கம் நிற்கிறார். நான் இந்த பக்கம் நிற்கிறேன். அரசியல் வேறு நட்பு வேறு.
திரையுலகில் ரஜினி எனக்கு போட்டியாளர் தான். ஆனால் நிஜ வாழ்க்கையில் என் நண்பர். அதுபோல தான் எனக்கும் மு.க.ஸ்டாலினுக்குமான நட்பு என தெரிவித்த கமல், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா நடைபெறுகிறது. இதற்கு காரணம் நான் மட்டும் அல்ல நீங்களும்தான் என கூறினார்.