கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
சுதந்திர தின நாளில் முதல்வர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கி கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் பெருமிதமாக கூறியுள்ளார்.
75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அவர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது 400 ஆண்டுகள் பழமை கொண்ட இந்த கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளேன்.
கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின நாளில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்கிறேன்.
சுதந்திர தின நாளில் முதல்வர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கி கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி தான்.எத்தனையோ முதலமைச்சர்கள் வந்தாலும் கொடியேற்றும் வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் கலைஞர் தான் என பெருமையாக கூறினார்.
மேலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்களை கொண்டு நிறுத்தியுள்ளது கொரோனா. கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டுவர மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பே காரணம்.
தமிழ்நாட்டின் நிதிநிலையை தமிழக மக்கள் நன்கு அறிந்திருக்க கூடும். நிதி நெருக்கடியான சூழலில் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் எனவும் உரையாற்றினார்.