புதிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.
அதன் படி அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் 130 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், ஆக்சிஜன் செரிவூட்டிகள், நாடித்துடிப்பு அறியும் கருவிகள், மின் விசிறிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் தாமோ அன்பரசன், மக்களவை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.