தமிழ்நாட்டிலே தடுப்பூசி தயாரிக்க முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
தமிழநாட்டில் அதிகரித்து வந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேகமும் அதிகரித்து உள்ளது. ஆனால் போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நிறுத்தப்பட்டன.
சர்வதேச அளவில் தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அறிவித்த டெண்டர்களுக்கு எந்த நிறுவனமும் பதிலளிக்கவில்லை. ஃபைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது எனத் தெரிவித்துவிட்டன.
இதனால் ஒன்றிய அரசே மொத்தமாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனப் பல்வேறு மாநிலங்களும் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன.
செங்கல்பட்டில் உள்ள ஹச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தை மாநில அரசிடம் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தற்போது தமிழ்நாட்டிலே தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான ஆலோசனை நடத்தினார்.