‘யார் காலிலும் விழ டெல்லி போகல’ - எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடந்த திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது சமீபத்தில் துபாய்க்கு சென்றிருந்த நேரத்தில் ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய செய்திகளை எல்லாம் நாம் பார்த்தோம்.
அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.காரணம் இங்கே எனக்கு முன்பு பேசியவர்களே அதற்குரிய விளக்கத்தைத் தந்துவிட்டார்கள். மேலும் மூன்று நாட்கள்டெல்லிக்குப் பயணம் சென்று நம்முடைய மாநிலத்தின் பிரச்சினைகளை எல்லாம் பிரதமரிடத்திலும், அதற்குரிய அமைச்சர்களிடத்திலும் எல்லாம் எடுத்துவைத்து உரிமைக்குக் குரல் கொடுத்து வந்திருக்கிறோம்.
அதையெல்லாம் மூடி மறைக்கவும், தாங்கிக்கொள்ள முடியாத சிலர் என்ன சொன்னார்கள் என்றால், ஏதோ பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனேன் என்று சொல்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
டெல்லி சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர வேறு அல்ல. பதவியேற்றபோதே நான் சொன்னேன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றுதான் சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டுக்காக உழைப்பேன் என்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.