தமிழகத்தில் நடந்து வரும் கொலை சம்பவங்கள் - புள்ளிவிவரத்துடன் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
அதிக குற்றங்கள் நடப்பதாக திட்டமிட்டு வதந்தி என புள்ளிவிவரத்துடன் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
திட்டமிட்டு வதந்தி
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் நடந்து வரும் கொலை சம்பவங்கள் குறித்து குற்றம்சாட்டி பேசினார். இதனால், கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.இதன்பிறகு, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: குற்ற சம்பவங்களே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை.
அவற்றில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதுதான் முக்கியம். முந்தைய ஆட்சியில் தூத்துக்குடி, சாத்தான்குளம் போன்ற சம்பவங்களை நீங்கள் மறந்துவிட கூடாது. தவிர, உங்களைப் போல, டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொல்ல நாங்கள் தயாராக இல்லை என்று கூறினார்.
மேலும் 2023-ல் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் 49,280 ஆக இருந்தது. 2024-ல் அது 31,498 ஆக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17,782 குற்றங்களை குறைத்திருக்கிறோம்.
2024-ல் கொலை குற்றங்கள் 6.8 சதவீதம், அதாவது 109 கொலைகள் குறைந்துள்ளன. பழிவாங்கும் கொலைகளின் எண்ணிக்கை 42.72 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.