5 மாநில தேர்தல் முடிவுகளால் மு.க.ஸ்டாலினுக்கு பின்னடைவு? - என்ன செய்ய போகிறார்?
5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக உள்ள சில கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க உள்ள நிலையில், மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக பாஜகவுக்கு எதிராக 3வது அணி அமைக்கும் திட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்துள்ளார். ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் இருவரும் எதிர்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்க முயன்று வரும் நிலையில் மு.க.ஸ்டாலினின் இந்த முயற்சி பெரிய முயற்சியாக பார்க்கப்பட்டது.
அதன் வெளிப்பாடு தான் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்திருந்தார். ஆனால் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்ட போதும் கூட மம்தா பானர்ஜி, கே சந்திரசேகர் ராவ் போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னிலை வகித்த காரணத்தால் இந்த இரண்டு தலைவர்களும் அந்த நிகழ்வை புறக்கணித்தாக கூறப்பட்டது. காரணம் காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என்றால் வந்து சேரலாம். ஆனால் அவர்களுக்கு தலைமை பதவிகளை கொடுக்க முடியாது. காங்கிரஸ் தனி பாதையில் செல்ல விரும்பினால் செல்லட்டும்.
மாநில கட்சிகளான நாங்கள் தனி பாதையில் செல்கிறோம் என்று மமதா பானர்ஜி கூறியிருந்தார். இதேபோல் கே சந்திரசேகர் ராவும் காங்கிரஸ் வருவதை விரும்பவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியுடன் தொடக்கத்தில் இருந்தே இவருக்கு கருத்து வேறுபாடு உள்ளதால் இத்தகைய முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் தான் 5 மாநில சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பெரும்பாலான மாநில கட்சிகள் காங்கிரசை புறந்தள்ளிவிட்ட நிலையில் திமுக மட்டுமே ஆதரித்து வருகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.