குடிமைப் பணி நுழைவு வாயில் தான், மாளிகை அல்ல: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூக நீதியை கடைபிடிக்கும் வகையில் அண்ணா மேலாண்மை நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் அண்ணா மேலாண்மை நிலையம் அமைந்துள்ளது. அரசு பணி என்பது இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் பணியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும், அரசின் திட்டங்கள், சட்டங்களை ஏழை - எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என குடிமைப் பணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர், இது நுழைவு வாயில்தான், மாளிகை அல்ல. இனிதான் அதிகம் உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதே சமயம், நம் வெற்றி நமக்கானது அல்ல, சமூகத்துக்கானது. அதிகாரத்துக்கு வந்த உடன் அதிகார வர்க்கத்தில் உள்ளோம் என்று எண்ணக் கூடாது. நேர்மையாக பணியாற்ற வேண்டும், சிலர் தவறான வழிக்கு தூண்டினாலும் சபலத்துக்கு உட்படக் கூடாது. பிரச்னையைக் கண்டு ஓடாமல், அதை தீர்த்து வைக்க வேண்டும். பணியின் போது மக்களை நேசிப்பது முக்கியம் என்றும் அறிவுறுத்தினார்.