மீட்பு களத்தில் கலக்கிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு
வெள்ள மீட்பு பணியில் இளைஞரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பலத்த மழை பெய்ததோடு, சென்னையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் போலீசார், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மழையில் நனைந்து, உடல் நலம் குன்றிய இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அவரைப் பார்த்த டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அலேக்காக இளைஞரை தோளில் தூக்கி ஓடிச்சென்று ஆட்டோவில் ஏற்றி, மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். மீட்பு பணி நடக்கும் இடத்தில் சில பணியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.
ராஜேஸ்வரியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும், மற்ற இடங்களில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்போருக்கு ஒரு உத்வேகத்தையும் அளித்தது. நேற்றே முதல்வர் ஸ்டாலின், காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ராஜேஸ்வரியை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததோடு, சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.