மோடியை புகழ்ந்து பேசிய இளையராஜா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ரியாக்ஷன் என்ன?
பிரதமர் மோடியை பற்றிய இளையராஜாவின் கருத்துக்கு திமுகவின் ரியாக்ஷன் என்ன என்பதை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். ,
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கும் நிலையில் அதில் மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும், மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்தை அரசியல் கட்சியினர் உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜகவும் களத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க போகிறார்கள். அதற்காகத்தான் அவர் இவ்வாறு மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசினார் என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் தனது கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்றும், தான் பதவிக்காக எதையும் பேசவில்லை என்றும் உண்மையைத்தான் சொன்னேன் என்றும் இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதனிடையே இளையராஜா கருத்துக்கு தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக சார்பில் பெரிய அளவில் எதிர் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மோடி குறித்து இளையராஜா கூறியது அவருடைய சொந்த கருத்து என்பதால் இதில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.