முதலமைச்சர் ஸ்டாலின் 3 மாவட்டங்களில் 2நாள் சுற்றுப்பயணம் - ஏன்!
முதலமைச்சர் ஸ்டாலின் மூன்று மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். இதனால், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
தொடர்ந்து, திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு செல்கிறார். அங்கு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்துகின்ற வகையில் 25 கோடி ரூபாய் செலவில் வானவில் மன்றம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சுற்றுப்பயணம்
அதையடுத்து நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், பைக்கில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார். அதன்பின், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா இறையூருக்கு செல்கிறார்.
அங்கு சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். மேலும், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேட்டுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட உள்ளார்.
நாளை, அரியலூர் அடுத்த கொல்லாபுரத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்ந்து நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். பின்னர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.