சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் : முதலமைச்சர் உத்தரவு
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்க உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் பதக்கங்கள்
தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு. வழங்கப்பட்டு வருகின்றன.
பதக்கங்கள்
அந்த வகையில் ,இந்த ஆண்டு, காவல் துறையில் முதல் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும்.

சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் வட்டார தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கும்.
முதலமைச்சர் அறிவிப்பு
அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். மேற்கண்ட பதக்கங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.