கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை சென்றடைந்தார்.
இதையடுத்து கோவை வ.உ.சி மைதானத்தில் அகழாய்வு கண்காட்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பாக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக்கண்காட்சியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்ட தொழில் முனைவோரோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,குணத்தால்,மணத்தால் இதமான கோவைக்கு நான் வந்திருக்கிறேன் கோவை மக்கள் தொடாத துறையும், அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை.
பல்வேறு தொழில்களின் மையமாக கோவை விளங்குகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு 5 முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியுள்ளோம்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
தகவல் தொழில்நுட்ப துறையிலும் கோவை வேகமாக வளர்ந்து வருகிறது.உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கோவை சிறந்து விளங்குகிறது.
கோவை மாநகரத்திற்கு தேவைப்படும் கட்டமைப்புகளை நிறைவு செய்யும் வகையில் இந்த பகுதிக்கான புதிய பெருந்திட்டம் 'மாஸ்டர் பிளான்' உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள திறமைமிக்க மனிதவளத்தை மேம்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வையை செயலாக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்,
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் நிறுவப்படும் என தெரிவித்திருந்தோம்.
அதன்படி அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவை மாவட்டத்திற்கும், மேற்கு மண்டலத்தின் முன்னேற்றதிற்கு கோவை விமான நிலையம் முக்கியமான ஒன்றாகும் .
கோவை விமான நிலையத்தை உலகத்தரத்தில் உயர்த்தும் பணியை கலைஞர் துவங்கி வைத்தார். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1,132 கோடி ரூபாயை ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை விமான நிலையம் விரைவில் தரம் உயர்த்தபடும் என உறுதி அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் இன்று (19-5-2022) கோயம்புத்தூரில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஆற்றிய உரை.#KovaiWelcomesCMStalin pic.twitter.com/jLodFjnWYK
— DMK (@arivalayam) May 19, 2022