கண்டக்டரே இப்படி நடக்கலாமா? - மூதாட்டி இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் முதல்வர் கண்டனம்

kanyakumari mkstalin kulachalbusissue
By Petchi Avudaiappan Dec 07, 2021 04:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கன்னியாகுமரியில் மீனவ மூதாட்டி ஒருவரை அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் பேருந்தில் இருந்து இறக்கவிட்ட சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் "மீன் வித்திட்டா வர்ற.. நாறுது இறங்கு இறங்கு" என கூறி அரசு பேருந்தில் இருந்து நடத்துநரால் இறக்கி விடப்பட்ட மீனவ மூதாட்டி ஒருவர் பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் நியாயம் கேட்கும் பரிதாப வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பேருந்து நடத்துநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

கண்டக்டரே இப்படி நடக்கலாமா? - மூதாட்டி இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் முதல்வர்  கண்டனம் | Cm Mkstalin Condemn To Kanyakumari Bus Issue

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் என்ற மூதாட்டி மீன் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலை தலைசுமையாக மீன்களை சுமந்து குளச்சல் பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள மீன்களை மாலையில் குளச்சல் மார்க்கெட்டில் விற்பனை செய்வார். 

இரவு மகளிருக்கான அரசு இலவச பேருந்தில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் செல்வம் நேற்று மீன்களை விற்பனை செய்துவிட்டு இரவு குளச்சல் பேருந்து நிலையத்தில் வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். செல்வத்தைக் கண்ட பேருந்து நடத்துநர் அவர் மீது துர்நாற்றம் வீசுவதாகவும், மீன் கூடை நாற்றத்தால் பேருந்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறி இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் கடும் அதிருப்தியடைந்த செல்வம் தனது ஆதங்கத்தை அங்கு நின்ற பொதுமக்களிடம் கொட்டி தீர்த்தார். இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். 

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்  “குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.