எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேற்றப்பட்டால் விளைவுகள் உறுதி - ஸ்டாலின் எச்சரிக்கை
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதாவின் நகல்களை எரித்து திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்றைய தினம் கூடியது. இந்த கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா, மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஏப்ரல் 18- ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் மேற்கண்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வரும் நிலையில், மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்திருந்த போதிலும், தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மசோதாவுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதலே தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

அந்த வகையில், நேற்றைய தினம் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுமாக திமுக தலைமை அழைப்பு விடுத்திருந்தது.
அதனை தொடர்நந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்புச்சட்டை அணிந்தவாறு கொடிக்கம்பத்தில் கருப்புக்கொடியை ஏற்றி வைத்து, மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.