தமிழகத்தை மிரட்டும் கொரோனா , தீவிரமாகும் கட்டுப்பாடுகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு என்பது படிப்படியாக உயரத் தொடங்கி விட்டது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாவட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
இதனால் அங்கு மீண்டும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்துள்ளன. அதே வகையில் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு என்பது முன்பை காட்டிலும் உயர்ந்து வருவதால், முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும், மீறினால் 500 ரூபாய் அபராதம் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முககவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
கொரோனா பரவல் குறித்த இந்த முக்கிய ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருகிற 27-ஆம் தேதி காணொளி மூலமாக ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.