‘’தன் உயிர்க்கு அஞ்சாது , கூடி எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவர்கள் நம் முப்படை வீரர்கள் ‘’ - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

wishes cmmkstalin ArmedForcesFlagDay
By Irumporai Dec 07, 2021 04:14 AM GMT
Report

முப்படை வீரர்களின் தியாகத்தையும் அவர்களின் வீரத்தையும் போற்றும் வகையில் இன்று கொடி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கூற்றுடன்று மேல்வரினும் தம்முயிர்க்கு அஞ்சாது, கூடி எதிர்நிற்கும் ஆற்றலான நம் முப்படை வீரர்கள் .

அவர்தம் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக மனமுவந்து, தாராளமாக நிதியளித்து நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம் என்று #ArmedForcesFlagDay நாளில் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெற்ற தாயையும், பெற்றெடுத்த செல்வங்களையும் ,உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து நாட்டின் பெருமையைக் காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள் இக்கொடி நாள் ஆகும்.

நம் சுதந்திர காற்றை சுவாசிக்க கொட்டும் மழையிலும் ,குளிரிலும் நின்று தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது ,இந்திய திரு நாட்டின் புகழை காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றுவதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு நல்வாழ்வு அமைத்து தருதலும் நமது கடமை அன்றோ.

 அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி வீச கொடி நாளின், கொடி விற்பனைக்கு மனமுவந்து பெருமளவில் நிதி அளிப்போம். அந்த நிதி அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு வகையிலும் பயன் தரும்.

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கும் தன்னலம் கருதாத அந்த தியாக வீரர்களுக்கான கொடிநாள் நிதிக்கு தொகை அளிப்பதில் தமிழ்நாடு எப்போதும் தனி இடத்தை பெற்று வருகிறது.

எனவே இவ்வாண்டும் பெருமளவில் நிதி வழங்கி முன்னாள் படை வீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் வணக்கத்தையும், நன்றியையும் காணிக்கையாக்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.