அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழக அரசு: முதலமைச்சர் ஸ்டாலின்

dmk cmstalin
By Irumporai Dec 03, 2021 07:50 AM GMT
Report

ஒமைக்ரான் வைரஸ் என அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தது. இதனால் முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

அதேசமயம் சமீபத்தில் பெய்த பருவ மழையால் , சென்னை உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சாலைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மாநகராட்சியின் துரிதமாக மேற்கொண்டது இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இந்த நிலையில் வெள்ள பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்  முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதலமைச்சர் :

"வரலாறு காணாத மழை பெய்த போதிலும் பாதிப்பு என்பது குறைவாகவே ஏற்பட்டுள்ளது . இன்னொரு முறை இத்தகைய மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம் .

மழைநீர் தேங்கும் இடங்களில் அப்பகுதி மக்களின் வழிகாட்டுதல்களோடு இணைந்து அதரிகாரிகள் பணியாற்ற வேண்டும்.சென்னையில் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான வடிகால்கள் இல்லாததே மழை நீர் தேங்கியதற்கு காரணம்.

முந்தைய பாதிப்புகளை எதிர்வரும் ஆண்டுகளில் தடுத்துவிட்டோம் என்கிற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். எனவே நடைமுறை சாத்தியமுள்ள திட்ட அறிக்கையை தாருங்கள்" என்றார்.

மேலும், இரவு, பகல் பாராமல் உழைத்து தற்போது  கொரோனவை கட்டுப்படுத்திய நிலையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கையை நம்மால் தடுக்க முடியாது; ஆனால் திறமையாக கையாள முடியும் . தற்போது ஒமிக்ரான் அச்சம் வந்துள்ளது, அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.