1000 ஆண்டு போராட்டத்தை ஒரே நூற்றாண்டில் துடைத்துவிட முடியாது : முதலமைச்சர் ஸ்டாலின்
தோள்சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது, இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
200 ஆண்டு போராட்டம்
கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 200 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் எத்தகைய இழிநிலை இருந்தது என்பதை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்துவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்றார்.
அனைவருக்கும் அனைவருக்கும் கல்வி கிடைக்க நீதிக்கட்சி வித்திட்டதாக கூறிய அவர், பின்னால் வந்த காமராசர், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாக குறிப்பிட்டார்.
தமிழகம் கேரளா
இன்றைய திமுக அரசு உயர்கல்விக்கும், ஆராய்ச்சி கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறிய முதலமைச்சர், அனைவரையும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி என்றார். காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை முன்னேற்றுவதால்தான் சிலர் தங்களை எதிர்ப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
ஆதிக்கத்திமிர் வீழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்த தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆண்டு நிறைவு!
— M.K.Stalin (@mkstalin) March 6, 2023
இவ்விழா, வெற்றியை நினைவுகூர மட்டுமல்ல; சீர்த்திருத்த இயக்கங்களால் நம் மண்ணில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை நினைவூட்டவும் சமத்துவத்துக்கான நமது போராட்டம் தொடருமென உணர்த்தவும்தான்! pic.twitter.com/gMPF9IwC0L
தொடர்ந்து பேசிய அவர், ஆயிரம் ஆண்டு போராட்டத்தை ஒரு நூற்றாண்டில் மொத்தமாக துடைத்துவிட முடியாது என்றாலும், சமூகநீதி போராட்டத்தை தெடர்வோம் என குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு வர இருக்கும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் இணைந்து கொண்டாட வேண்டும் எனக் கூறினார்.