பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு வேகத்தில் தமிழ்நாடு பயணிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு வேகத்தில் தமிழ்நாடு பயணிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் மாநாடு
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது. இந்த 2 நாள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாடானது இன்று மற்றும் நாளை (ஜனவரி 7,8) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்றுள்ளன. மேலும், 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது "வெளிநாடுகளுக்கு போகும் போது கோட் சூட் அணிவது வழக்கம், எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளாதால் இன்று கோட் சூட் அணிந்துள்ளேன்.
சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது, அதே போல இந்த மாநாட்டின் மூலம் முதலீடுகளும் மழையாக பெய்யும் என நம்புகிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மத்திய அமைச்சருக்கு பாராட்டு.
பல்வேறு வகையில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு வேகத்தில் தமிழ்நாடு பயணிக்கிறது" என்றார்.