கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதிய பேருந்து நிலையம்
தென்மாவட்ட மக்கள் சென்னையிலிருந்து புறப்பட வசதியாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
88.52 ஏக்கர் பரப்பளவில் 14 நடைமேடைகளுடன், ரூ.393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இங்கு ஒரே நேரத்தில் 400 அரசுப் பேருந்துகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை கையாள முடியும். மேலும், இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 840 தனியார் பேருந்துகளுடன் 2,130 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்?
நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாக இடவசதியும் உள்ளது. பிரதான கட்டடத்தின் அடித்தளங்களில், ஆயிரம் கார்கள் மற்றும் 2 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 100 கடைகள், 4 உணவகங்கள், துரித உணவகங்கள் பயணச்சீட்டு வழங்கும் இடம், மருத்துவ மையம், தாய்ப்பால் ஊட்டும் அறை, ஏ.டி.எம். அறைகள், 540 கழிப்பறைகள், நடத்துநர்கள், ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், 4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 12 இடங்களில் குடிநீர் வசதிகள் என பல்வேறு வகையில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்தார்.