நாற்பதும் நமதே.. நாடும் நமதே - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்!
தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
மு.க. ஸ்டாலின்
பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதமே உள்ள நிலையில் திமுக.வில் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வரும் 21-ம் தேதி திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை மிகப்பிரமாண்டமாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் "ஜனநாயகம் மலர்வதற்கு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய-கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படக் கூடிய மத்திய அரசு 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைந்திட வேண்டும். மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது.
நாற்பதும் நமதே
அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும்.
தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.
அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்" என்று தஹிரிவித்துள்ளார்.