‘என்னை மிரட்ட முடியாது’ - எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
திமுக அரசின் செயல்பாடு குறித்து குற்றம் சாட்டிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கே.புதூர், மூன்று மாவடி, ஆரப்பாளையம், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் காணொளி காட்சி வாயிலாக பரப்புரை மேற்கொண்டார்.
இதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண், கண்ணகி நீதி கேட்டு முழங்கிய மண், கருணாநிதி நீதி கேட்ட மண், திமுக இளைஞர் அணிக்கு அடிக்கல் நாட்டிய மண் மதுரை. திமுக வரலாற்றில் மதுரையும், மதுரை வரலாற்றில் திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் மதுரையில் பல்வேறு மேம்பாலங்கள், கல்லூரிகள், குடிநீர் திட்டம், வாடிப்பட்டி ஜவுளி பூங்கா, சர்வதேச விமான நிலையம், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் மதுரை மேலூரில் புதிய சிப்காட் அமைக்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பரமக்குடி துப்பாக்கி சூடு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஸ்வாதி - ராம்குமார் கொலை, கொட நாடு இப்படி பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிமுக ஆட்சியில் நடைபெற்றன. பாஜக அரசுக்கு அடிமை சேவகம் செய்த ஆட்சி தான் பழனிசாமி - பன்னீர்செல்வம் நாடக கம்பெனி. அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வித விதமாக காமெடிகள் செய்தவர்கள்.
திமுக ஆட்சி என்பது உதயசூரியனின் ஆட்சி. எல்லோருக்கும் விடியல் தரும் ஆட்சி. அந்த விடியலின் வெளிச்சம் பழனிசாமியின் கண்ணைக் கூசச் செய்கிறது. மிசாவையே பார்த்த மு.க.ஸ்டாலினை உங்களால் மிரட்ட முடியாது என முதலமைச்சர் பிரசாரத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.