பறிபோகும் பதவி... சிக்கலில் தமிழக அமைச்சர் : முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை?
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 14 ஆம் தேதி தமிழக போக்குவரத்து துறை சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. இதில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் அவரது வரவு செலவு கணக்கு அடங்கிய டைரி, பணம் எண்ணும் எந்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு துணை ஆணையர் நடராஜன் மற்றும் அலுவலக ஊழியர் முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் நடராஜன் மீது துறை ரீதியான இடமாறுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் திருநெல்வேலி போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் குறித்தும் புகார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும், தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அது முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ராஜகண்ணப்பன் அமைச்சராக தொடர மாட்டார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கும் தீபாவளி ஸ்வீட்ஸ்களை ஆவின் நிறுவனத்தில் வாங்காமல் கமிஷனுக்காக வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம் வாங்க டெண்டர் கொடுக்கவுள்ளதாக வெளியான தகவல் கடந்த அக்டோபர் மாதம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் ஆரம்பத்திலேயே வெளிவந்ததால் ஆவின் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது.
கடந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட கலங்கப்பெயர் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதால் இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது முதலே ஊழல் புகார் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாரபட்சம் பார்க்காமல் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பேன் என முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி கடந்த 10 மாத ஆட்சிக் காலத்தில் நிர்வாகிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தகக்கது.