முதலமைச்சர் தனி விமானம் மூலம் துபாய் பயணம் - விமான கட்டணத்தை திமுக செலுத்தும் அமைச்சர் தகவல்..!

CM Minister MKStalin Explain மு.க.ஸ்டாலின் துபாய் DubaiExpo TravelAllowance முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் துபாய்பயணம்
By Thahir Mar 28, 2022 12:12 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24-ம் தேதி விமானம் மூலம் துபாய் சென்றார்.

அங்கு ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, தமிழக மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் செல்லவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவே துபாய் சென்றுள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்த எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது: விமானம் இல்லாத சூழலால் தனி விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார்.

அதற்கான செலவை தி.மு.க.வே ஏற்றுக்கொண்டிருக்கிறது. தனி விமானத்தின் செலவு அரசு உடையது அல்ல, தி.மு.க.வின் செலவுதான்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

முதலமைச்சரின் துபாய் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் மட்டுமல்ல, அயலக தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கான பயணம் ஆகும்.

உலக கண்காட்சி நிறைவுபெற சிறிது நாட்கள் இருக்கும் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது? அவர் முதலமைச்சராக இருந்தபோது சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என தெரிவித்துள்ளார்.