திரும்ப அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா - நாளை அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்
நீட் தேர்வில் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்தாண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் இந்த குழு அளித்த பரிந்துரையை அடிப்படையாக வைத்து திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவைத் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நாளை அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் எம்எல்ஏவும், மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு விலக்கு அளிப்பது தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்புச் செய்தது குறிப்பிடத்தக்கது.