திராவிட மாடல் அரசின் டார்கெட் ஒரு டிரில்லியன் - ஸ்பெயின் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக 8 நாட்கள் ஸ்பெயின் செல்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின்
தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டார்.
அதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "திராவிட மாடல் அரசு ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டும் நோக்கில் 2024-ம் ஆண்டு தொடக்கத்திலேயே உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது.
இதைத் தொடர்ந்து, எட்டு நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். அடுத்த மாதம் 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன். கடந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றிருந்தேன்.
நம்பிக்கை
அந்த பயணத்தின் போது 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதேபோல கடந்த வருடம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தின் போது 1,342 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர் மாநாடு நடக்க இருக்கிறது. இதில் ஸ்பெயின் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.